அதிகாலை அவசரமாய் அயலூர் செல்ல ஆயத்தமாக அலுவல் கோப்புகள் தேடி எடுக்க அலமாரி அடுப்பங்கரை மேசை கட்டில் தொட்டில் இண்டு இடுக்கு என தேடி ஓயும் வேலையில் , நீண்ட நாள் தேடுதலாய் இருந்த இளையராஜா மெல்லிசை குறுந்தகடு, குக்கர் வெய்ட் , செவி பேசி , காஜல் கண்மை , உதட்டு சாயம் , பச்சை துண்டு , பத்து ரூபாய் பவளமணி , நட்சத்திர பொட்டு, நோக்கியா பேட்டரி என வரிசைகட்டி கண் முன் காண பெறுவதெல்லாம் தேடலின் வரங்கள்
கடவுள் எனக்கு காட்சி கொடுத்தார் அநீதி என்னை அச்சுறுத்தும் போதும் மடமைகள் என்னை சுட்டு எரிக்கும் போதும் சினம் என்னை சீரழிக்கும் போதும் கவலை என்னை கதிகலங்க செய்யும் போதும் சன்னல் வழியே வேடிக்கை பார்த்தே கடவுள் எனக்கு காட்சி கொடுத்தார்
உதிரத் துளிகள் உலகிற்கு உவகையை தந்த வண்ணம் உள ; செவி தொடும் மழலை சொற்கள் குழலையும் யாழையும் ஏறிட்டு பார்க்க வைப்பதில் பாரபட்சம் பார்ப்பதில்லை ; உயிர் கலக்கும் மெய் உரசல் எல்லாம் உயிர்மெய்யை எல்லா காலத்திலும் தந்து செல்வதில்லை ; அது அப்படி ஆகி போதலும் அமைத்தவன் செயலே, அதை உணராது மாதர் மனம் நோக மாமொழி வசைகள் எதற்கு ? புவி சேரா பிண்டத்தை பிழையென சூட்டும் பிதற்றல்கள் வேண்டா . மழலை கொள்ளா மாந்தரும் மாந்தரேயென மாநெறி காத்தல் - நம் மாண்பிற்கு அழகு மாதரை போற்றுவோம் சில நேரத்திலேனும் அவர் தம் மனங்களையும் .
ஒற்றை நிறப்புரி ஒன்றாய் கலந்து ஒய்யார சிங்காரி உதித்து விட்டாள் உலகநாயகனுக்கு. ஒற்றை நிறப்புரி ஒன்றாய் கலந்து ஒய்யார சிங்காரி உதித்து விட்டதலாலே அவன் உலகநாயகனாகி போனான். அழகிய அச்சில் உயிர் ஊற்றி வார்த்தமையால் பேரழகி ஒருவள் பேரண்டத்தில் கூடிக் கலக்க கூடிவிட்டாள். பரந்த மார்பில் பாதை செய்து பார்த்திருந்த அவனுக்கு சின்னசிறு பாதம் கொண்டு எட்டி வைத்து நடை பழக நங்கை அவள் தோன்றிவிட்டாள். ஜனத்தின் நாயகி ஜானகி வந்து ஜடைபின்ன கடவாலென ஜடாமுடி தரித்து ஜெபம் செய்து காத்திருந்தான் . இனி சிலகாலம் ஜடை பின்னி பூ சூடி போட்டு வைத்து மையிட்டு அழகு பார்த்து கிடப்பாள் அவன் உலகாளும் உலகநாயகி .
ஆண் சாதி பெண் சாதி பிற சாதி சமாதி என சமத்துவம் சமைத்து சமூக நீதி காத்து கவைக்கு உதவா காரியங்கள் கருத்தில் தள்ளி நற்சிந்தை செய்து தையலெல்லாம் தொழில் செய்து தனம் பெற தளம் செய்த தாடிக்காரர் இவர்